தீபாவளி என்றால் தீபங்களை வரிசையாக வைப்பது என்று பொருள்படும் (தீபம் = விளக்கு + ஆவளி = வரிசை). அஜ்ஜான இருளை அகற்றி ஞான ஒளியை பெறுவதே இப்பண்டிகையின் அர்த்தமாகும். தீப திருநாளில் நமது முன்னோர்கள், தீப மங்கள ஜோதியாக விளங்கும் இறைவனை விளக்கேற்றி வணங்கினார்கள்.

தீபாவளி எப்போது கொண்டாடப்படுகிறது?

தமிழ் மாதமான ஐப்பசியில் (துலா மாதம்), தேய்பிறை (கிருஷ்ணபக்ஷ) சதுர்த்தசி திதியில் தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளை நரக சதுர்த்தசி என்றும் அழைப்பார்கள். அமாவாசைக்கு முன்னால் வரும் திதியான சதுர்த்தசி திதி அன்று, விடியற்காலை நேரமான 4.30 முதல் 6 வரை தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று நம் சாஸ்திரம் கூறுகிறது.

தீபாவளியின் பின்னணி:

நரகாசுர வதம்

முன்பொரு காலத்தில் நரகாசுரன் என்ற ஓர் அசுரன் அஸ்ஸாம் நாட்டை  (Assam; வடகிழக்கு இந்தியா, பங்களாதேஷ் அருகில்) கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான். அவன் பூதேவிக்கும் (பூமாதேவி) வராஹ மூர்த்திக்கும் (நாராயணனின் மூன்றாவது அவதாரம்)  மகனாகப் பிறந்தவன். தெய்வ தொடர்பினால் பிறந்த பிள்ளை ஆயினும் துர்செர்க்கையால் அவன் அசுரனானான். பிரம்மனை  கால தவம் செய்து சாகா வரம் பெற வேண்டினான். அதை பிரம்மன் கொடுக்க மறுத்ததால் அவன் தன் தாயின் மூலம்  மட்டுமே மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தை வேண்டிப் பெற்றான்.

நரகாசுரன் பெற்ற வரத்தின் மமதையால், அவன் உலகத்தையே துன்புறத்தி வந்தான். மேலும் தேவலோகத்தையும் கைப்பற்றினான். இதனை தாங்காத இந்திராதி தேவர்கள் ஸ்ரீமன் நாராயணிடம் முறையிட்டனர். நாராயணனும் கிருஷ்ணாவதாரத்தில் அவர்களின் கஷ்டத்தைப் போக்குவேன் என்று கூறினார்.

துவாபரயுகமும் வந்தது. கிருஷ்ணாவதாரமும் சம்பவித்தது. கிருஷ்ணன் தேவர்களுக்குக் கொடுத்த வாக்குக்கு இணங்க நரகாசூரனோடு போர் தொடுத்தார். பூதேவியின் அம்சமான சத்யபாமாவும் (கிருஷ்ணரின் இரண்டாவது மனைவி) கிருஷ்ணரோடு போருக்குச் சென்றாள்.

பல நாள் போர் புரிந்தும் கண்ணனால் நரகாசுரனைக் கொள்ள முடியவில்லை. அப்போது நரகாசுரனின் வரம் கண்ணனுக்கு நினைவு வந்தது. அச்சமயம் நரகாசுரன் கிருஷ்ணன் மீது அஸ்திரத்தை எய்தினான். தருணம் பார்த்து மதுசூதனன் அந்த அஸ்திரம் தாக்கி மயக்கமுற்றது போல் நடித்தான். அதை கண்டு சத்யபாமா பெரும் சினம் கொண்டாள். வில்லேந்தி அஸ்திரத்தை நரகாசுரன் மீது  தொடுத்தாள். அஸ்திரம் தாக்கி நரகாசுரன் மாய்ந்தான். இறக்கும் தருவாயில் பரந்தாமனிடம் ஒரு வரம் கேட்டான். அஜ்ஜான இருள் அகன்று ஞான ஒளி பெருகும் நாளாக அவன் இறந்த தினத்தை உலக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டான். கிருஷ்ணரும் அவ்வாறே வரமருளினார். அந்த தினத்தையே நாம்  இன்று வரை தீபாவளி பண்டிகையாக  (நரக சதுர்தசியாக) கொண்டாடுகிறோம்.

இராமபிரான் அயோத்திக்கு வருகை தந்த நாள்

ஸ்ரீ இராமபிரான் வனவாசம் முடிந்து அயோத்திக்கு வந்த நாளாக தீபாவளி கருதப்படுகிறது. அந்நாளில் அயோத்தியா வாழ் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளையும் வீதிகளையும் அலங்காரம் செய்து தீப விளக்குகள் ஏற்றி ஸ்ரீ இராமபிரானை வரவேற்று, குதுகலமாக கொண்டாடினர்.

மஹாலக்ஷ்மி அவதார தினம்

கிருதயுகத்தில் துர்வாச மஹரிஷியை அவமதித்ததால் அவரின் சாபத்துக்கு ஆளானான் இந்திரன். அதனால் தேவேந்திர பதவி  மற்றும் தன் சொத்து சுகம் அனைத்தையும் இழந்து பாவியாகி திரிந்தான் இந்திரன். அவன் மட்டுமே அல்லாது தேவர்களும் லக்ஷ்மி கடாக்ஷத்தை இழந்து இந்திரனோடு திரிந்தனர். இழந்த இராஜ்ஜியத்தையும் லக்ஷ்மி கடாக்ஷத்தை மீண்டும் பெற ஒரு வழி கூறினார் ஸ்ரீமன் நாராயணன்.

“மந்தர மலையை மத்தாக கொண்டு, வாசுகி பாம்பை கயிறாக கொண்டு, ஒரு புறம் தேவர்களின் பரம எதிரிகளான அசுரர்களும் மறு புறம் தேவர்களும் சேர்ந்து திருபார்கடலை கடைய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தேவர்கள் இழந்த பதவி முதல் அனைத்தையும் மீண்டும் பெறுவர்” என்று கூறி அருளினார்.

அதை போலவே தேவர்களும் திருபார்கடலைக் கடைந்தனர். அப்பொழுது தேவர்கள் இழந்த அமிர்தம், ஐராவதம், கல்பவிருக்ஷம் யாவும் திருபாற்கடலில் தோன்றி அவர்கள் வசமாயின. அதே சமயத்தில், ஆதிசக்தியின் அம்சமான மகாலஷ்மி தோன்றி தேவர்களுக்கு ஆசி வழங்கி பின் திருமாலுடன் சேர்ந்தாள். அவள் அவதாரம் செய்த நாளும் தீபாவளி என்று நம் புராணம் கூறுகிறது.

தீபாவளி அன்று மற்ற முக்கிய திருவிழாக்கள்:

  1. காளி பூஜை – ஓடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் கொண்டாடப்படுகிறது.
  2. கோவர்த்தன பூஜை – இந்தியாவின் மத்திய மற்றும் வடக்கு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
  3. இந்து புத்தாண்டு – இனிதியாவின் மேற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் உள்ள சில இடங்களில் கொண்டாடப்படுகிறது.
  4. கேதார கௌரி விரதம் – சைவர்கள் மேற்கொள்ளும் விரதம்.

இவ்வாறாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கக்ளில் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

இந்த மங்கள பொங்கும் மகத்தான தீபத் திருநாளை நம் சுற்றத்தாரோடும் நண்பர்களோடும் மகிழ்ச்சியாக கொண்டாடும் இத்தறுவாயில், ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகள் மற்றும் ஏழை எளியவர்களின் வாழ்வில் மகிர்ழ்ச்சி எனும் தீப ஒளியை ஏற்றி வைத்தால் அதுவே உண்மையான தீபாவளி!

வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் மங்காத மங்களம் பொங்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s