தேக்கா சந்தையில் அமைந்திருக்கும் இந்த ஒரு பரோட்டா கடையில் எப்போதுமே கூட்டம் அலைமோதும். அன்று ஞாயிற்றுகிழமை காலை 7 மணி. பரோட்டா கடையில் வழக்கம்போல் கூட்டம். கூட்டம் நீண்டுகொண்டே போனது. சமாளிக்க முடியவில்லை கடை முதலாளிக்கு.

முதலாளி, “டேய் சீக்கிரம் போட்டு தொல! எங்க அவன காணும்…இன்னும் வரலையா?” என பரோட்டா போடுபவனை அதட்டினார்.

“உங்களுக்கு என்ன வேணும்?” என்றார் பரோட்டா வாங்க வந்தவரிடம். என்ன வேண்டும் என்று தெரிந்து கொண்டு கடைக்குள்ளே பரோட்டா போடுபவனிடம் சத்தமாக, “ஒரு கோசோங். ரெண்டு முட்டை.” என்றார். கடையில் 3 பேர் வேலை பார்த்தனர். இருவர் பரோட்டா போடுபவர்கள்- தினேஷ் மற்றும் ராமு. இன்னொரு நபர் அன்று கடைக்கு தாமதமாக வந்தார். அவரைத் தான் முதலாளி தேடி கொண்டிருந்தார்.

“யோவ் சாமி! இப்ப தான் கடைக்கு வழி தெரிந்ததா? 7 மணிக்கு வறீயே. உனக்கு அறிவு இல்ல?” என்று கடிந்து கொட்டினார் முதலாளி. கூட்டமாக இருப்பினும் அதனைக் கண்டு கொள்ளாமல் அவர் சாமியைத் திட்டினார். கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த சில பேருக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. ஆனால், முதலாளிக்கு எந்த ஒரு கூச்சமும் இல்லை. ஒன்றும் பேசாமல் சாமி கடைக்குள் சென்றார். முதலாளி பரோட்டா பரிமாற சென்ற நேரம் பார்த்து தினேஷ், “சாமி அண்ணே, ஏன் லேட்டு?” என்றான்.

சாமி, தனது சட்டை பையிலிருந்த கோயில் பிரசாதத்தை எடுத்து கொடுத்தார் தினேஷுக்கும் ராமுவுக்கும். ராமு, “என்ன அண்ணே விசேஷம் இன்னிக்கு?” என்றான் பரோட்டாவில் ஒரு முட்டையை உடைத்தபடி.

சாமி, “இன்னிக்கு எனக்கு பொறந்த நாளு.” என்றார் கோயில் பிரசாத பொட்டலத்தை சட்டை பையில் போட்டவாறு.

ஆச்சிரியத்துடன் தினேஷ், “அப்படியா அண்ணே?”. தினேஷ் சாமியின் கையைக் குலுக்கி பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொன்னான்.

இன்னொரு பரோட்டா மாவு உருண்டையைக் கையில் எடுத்த ராமு, “என்ன வயசு அண்ணே இருக்கும் உங்களுக்கு? ஒரு 55 இருக்குமா?”

சாமி, “இல்ல தம்பி. எனக்கு வயசு 72…” என்றார்.

ஆச்சிரிய ரேகைகள் படர்ந்தன தினேஷ் ராமு முகங்களில். அந்த ஆச்சிரிய ரேகைகளுக்கு பின்னால் பல அர்த்தங்கள் இருந்தன- இந்த வயதிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயமா? இந்த வயதிலும் இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா?

கடையில் மூவரும் பேசி கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டார் முதலாளி. கடைக்குள் வந்தவர், “என்ன ஒரே சத்தம் இங்க?” என்று குரலை உயர்த்தினார்.

பயத்தால், ராமு உளறிகொட்டினான், “இன்னிக்கு சாமி அண்ணனுக்கு பொறந்த நாளு…”

கையில் கொண்டு வந்திருந்த சில்லறைகளை எண்ணிகொண்டிருந்தார் முதலாளி. ராமு சொன்னதைக் கேட்டு, “ஓ…. கவர்மெண்டுக்கு சொல்லி, எல்லாருக்கு லீவு விட்டுடலாமா?” தொடர்ந்து சில்லறைகளை எண்ணினார். எண்ணி முடித்துவிட்டு கல்லாபெட்டியில் போட்டார்.

“வேலைய பாக்க சொன்னா…பொறந்தாள் கொண்டாடுறாங்களாம்…யோவ் சாமி….அந்த மேசைய போய் கவனி…” என்று முதலாளி விரட்டினார். ஒரு நல்ல நாள் அன்றும் முதலாளி இப்படி கடிந்து கொட்டுகிறாரே என்று சற்று மனம் வேதனை அடைந்தனர் தினேஷும் ராமுவும். ஆனால், சாமி எதையும் அதிகமாய் பொருட்படுத்தாமல் சொன்ன வேலையைச் செய்ய கிளம்பினார்.

முதலாளி, “சரி மசமசனு நிக்காம….அந்த வெள்ளக்காரனுக்கு மிச்ச காச கொடுத்திடு.” என்று சொல்லிவிட்டு இன்னொரு மேசைக்கு பரோட்டா கொடுக்க சென்றுவிட்டார்.

வெள்ளைக்காரர் கொடுத்த காசை பல தடவை எண்ணினார் சாமி. விலை பலகையைப் பார்த்து, “ஒரு கோசோங்….ஒரு வெள்ளி. ஒரு முட்டை…ஒரு வெள்ளி இருபது காசு….. சேர்த்தா…ரெண்டு வெள்ளி இருபது காசு….அப்பரம் ஒரு வெங்காயம்…அது வந்து ஒரு வெள்ளி பத்து காசு….முன்னாடி ரெண்டு வெள்ளி இருபது காசு…இது சேர்த்தா…..” என்று மனக்கணக்கு போட்டு குழம்பி போய் நின்றார்.

கடைக்கு திரும்பிய முதலாளி, “என்ன பண்ணிகிட்டு இருக்க நீ?” என்றார் அதிகார தோரணையில்.

சாமி, “இல்லண்ணே…இந்த காசு….” என்று இழுத்தார்.

முதலாளி, “ஒரு கோசோங், ஒரு முட்டை, ஒரு வெங்காயம். இது எத்தனனு உனக்கு தெரியல இன்னும்?” என்று சாமியின் கையில் இருந்த காசை வேகமாய் பிடிங்கினார்.

ஒரு நொடியிலேயே காசை எண்ணிவிட்ட முதலாளி சாமியைப் பார்த்து, “மொத்தம் 3 வெள்ளி முப்பது காசு. நாலு வெள்ளி கொடுத்திருக்கான். மிச்சம் எவ்வளவு கொடுக்கனும்?” என கேட்டார் சாமியிடம். கணக்கு அவ்வளவாய் பிடிப்படாத சாமி மேலும் குழம்பி போனார். சாமிக்கு பதில் தெரியவில்லை என்றதும் முதலாளிக்கு எரிச்சல் வந்தது.

ஆத்திரம் அடைந்த முதலாளி, “70 காசு. இந்தா குடு…” முதலாளி மேலும் திட்டிவிடுவாரோ என்ற அச்சத்துடன் அவ்விடத்தைவிட்டு வேகமாய் நடந்து இன்னொரு மேசைக்கு மீன் கறியை கொண்டு போனார் சாமி.

வலது கையில் பளாஸ்டிக் மங்கு ஒன்றில் மீன் கறியை ஏந்தியவாறு நடந்த சாமி கண்களில் தென்பட்டது அந்த காட்சி. கூன் விழுந்த மூதாட்டி எப்போதுமே மேசைகளையும் இருக்கைகளையும் சுத்தம் செய்பவர். சாமி வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஒருநாளும் மூதாட்டி அவரின் கடமைகளைச் செய்யாமல் இருந்ததில்லை. அன்றும் மேசைகளில் இருக்கும் தட்டுகளைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தார். மெதுவாய் ஒவ்வொன்றாய் அவர் தட்டுகளை எடுத்து ஒரு வாளியில் போடுவதைக் கவனித்தார் சாமி. மூன்று மேசைகளைச் சுத்தம் செய்துவிட்டு நான்காவது மேசையில் ஒரு தட்டைப் பார்த்தார் மூதாட்டி. அந்த தட்டில் ஒரு பரோட்டா காய்ந்து இருந்தது. யாரோ முழுதாய் சாப்பிட்டு முடிக்காமல் அப்படியே விட்டு சென்ற தட்டு.

அதிலிருந்து ஒரு சின்ன துண்டு பரோட்டாவை கையில் எடுத்து நுகர்ந்து பார்த்தார் மூதாட்டி. மறுபடியும் நுகர்ந்த பரோட்டா துண்டை அந்த தட்டில் போட்டார். ஆனால் வாளிக்குள் போடவில்லை. அந்த தட்டை மட்டும் கையில் ஏந்தியவாறு ஒரு மறைவான இடத்திற்கு சென்றார். வாளியைக் கீழே வைத்துவிட்டு, அந்த தட்டிலிருந்த பரோட்டாவை சாப்பிட ஆரம்பித்தார். இதனைப் பார்த்த சாமிக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அவரது மனம் ஏதோ செய்தது. இப்படிதான் தினமும் அந்த மூதாட்டி உணவு சாப்பிடுகிறாரோ என்று நினைத்து சாமியின் மனம் வேதனையில் புரண்டது.

மூதாட்டி நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்தார் சாமி. மூதாட்டி அவ்வளவாய் யாரிடமும் பேச மாட்டார். சாமியை பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தார். பரோட்டா தட்டை மறைக்க முயன்றார். ஆனால், மூதாட்டியால் இயலவில்லை. சாமி சுற்றும் முற்றும் பார்த்தார். குறிப்பாக, முதலாளி பார்க்கிறாரா என்பதைக் கவனித்தார். முதலாளி தென்படவில்லை. சாமி, தனது கைகளிலிருந்த மீன் கறியை மூதாட்டியின் தட்டில் ஊற்றிவிட்டு, பக்கத்திலிருந்த குப்பையில் பளாஸ்டிக் மங்கை தூக்கிபோட்டார். பிறகு, விறுவிறு என்று அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். சாமியின் செயலைக் கண்டு பூரிப்பு அடைந்த மூதாட்டிக்கு ஆனந்தம். புன்னகையித்தபடி மூதாட்டி, “ஹேய் ஹேய்!” என நன்றி கூறினார் அவருக்கு மட்டுமே புரிந்த மொழியில்.

மீன் கறி கேட்டு ரொம்ப நேரம் ஆகியும் வராததால் சத்தம் போட்டுவிட்டு சென்றார் வாடிக்கையாளர் ஒருவர். அந்நேரம் பார்த்து, சாமி கடைக்குத் திரும்பினார். கோபத்தில், முதலாளி, “யோவ் சாமி! உனக்கு ஒரு வேலையும் உருபடியா பண்ண தெரியாதா? ஒரு சின்ன வேல….ச்சே…உன்னையெல்லாம் வச்சுகிட்டு…. மீன் கறி எடுத்துட்டு போனீயே எங்க? ” என கேட்டார்.

மூதாட்டிக்கு உதவி செய்தேன் என்றால் பாராட்டுவாரோ மாட்டாரோ என்ற சிந்தனை ஓடியது. முதலாளியின் குணம் தெரியும். இருந்தாலும் தன் பிறந்தநாள் அன்று பொய் சொல்ல வேண்டாம் என்று நினைத்தார் சாமி. இந்த சின்ன விஷயம் பலகோடி குழப்பங்களைக் கொடுத்தது சாமிக்கு. உண்மையைச் சொல்லிவிடலாம் என்று சாமி வாயைத் திறக்க, முதலாளியின் சிவந்த கண்களைப் பார்த்தார்.

“கீழே ஊத்திடுச்சு.” சாமியின் வார்த்தைகள், போக்குவரத்தில் சிக்கிய முதலுதவி வண்டிபோல் தவித்தன.

நெற்றியில் அடித்துகொண்ட முதலாளி, “என்னது!!! கீழே ஊத்திட்டீயா? யோவ் அறிவு இருக்கா? சோறு தானே திங்குற? ” என்றவர் தொடர்ந்தாற்போல் ஐந்து நிமிடங்களுக்கு திட்டி தள்ளிவிட்டார். கடுமையான சொற்களால் தாக்கப்பட்ட சாமியின் உள்ளம் சுக்குநூறாகியது.  என்ன சொல்வதென்று புரியாமல் நின்றார் சாமி. தினேஷுக்கும் ராமுவுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றார்கள்.

“மூனு மாசத்துக்கு முன்னாடி வேலை கேட்டு வந்து நின்னபோ வேலை கொடுத்தா நல்லாயிருக்கும்னு நினைச்சு உனக்கு வேல கொடுத்தேன் பாரு அது என் தப்பு தான்….” என்று திட்டுவதை நிறுத்தவில்லை முதலாளி. ராமுவுக்கு மனம் கேட்கவில்லை.

ராமு, முதலாளியிடம், “தெரியாம கீழே போட்டு இருப்பாரு…விடுங்க” என்று கூற, முதலாளியின் சொற்கள் ராமுவின் மீது பாய்ந்தன.

“டேய்! என்ன ஆளாளுக்கு அவன் இஷ்டபடி நடக்குறீங்க. கடைக்கு முதலாளினு நினைப்பா? எனக்கே புத்திமதி சொல்றீயா நீ!” என்று முதலாளி ‘பாய்ந்தவுடன்’ அடிப்பட்ட நாய்க்குட்டிபோல் நகர்ந்து கடைக்குள் சென்றான் ராமு.

முதலாளி, “யோவ் சாமி! நீ கிளம்பி போயிடு. என் கண்ணு முன்னால நிக்காத.” என்று கூறிவிட்டு உட்கார்ந்தார். அவர் கைபேசிக்கு அழைப்பு வந்ததால் கொஞ்சம் தூரம் போய் பேசினார் முதலாளி. அப்போது கடையிலிருந்து விரைந்து வந்த தினேஷ் சாமியிடம், “அண்ணே, நீங்க கொஞ்ச நேரத்துக்கு எங்கயாச்சும் போயிட்டு வாங்க. உங்கள இங்க பார்த்தாரு இன்னும் சத்தம் போடுவாரு.” என்றான்.

தினேஷ் சொன்னதுபோல் செய்தார் சாமி. தனது வீட்டிற்கு சென்றார். தனியாக வாழும் சாமியின் வீட்டிலிருந்த ஒரே பெரிய பொருள்- மெத்தை. அதில் உட்கார்ந்தார் சட்டையை கழட்டியபடி.. மெத்தை எதிரே சின்ன கண்ணாடி. அதில் தன்னைப் பார்த்தார்..

40 வருடங்களுக்கு முன்பு குண்டர்கும்பலில் சேர்ந்து கொடூர செயல்களில் ஈடுபட்ட சாமி சிறை தண்டனை அனுபவித்தவர். பலரின் வாழ்க்கையை அநியாயம் செய்த சாமியின் இடது கை வெட்டப்பட்டது ஒரு கோர சம்பவத்தில். சிறையிலிருந்து வெளியே வந்தபோது 4 வருடங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டார். சிறையில் இருந்தபோதுகூட அவ்வளவாய் மனவேதனை அடைந்ததில்லை. ஆனால், இன்று அதிகமாகவே வேதனை அடைந்தார் முதலாளியின் சொற்களால். சுவரில் தலையைச் சாய்த்து பச்சை குத்தப்பட்டிருந்த இடது தோள்பட்டையைத் தடவி கொடுத்தவாறு, முதலாளியின் அழைப்புக்காக கைபேசியையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார் சாமி.

Gayathiri has been a blogger for about eleven years now. She also blogs at www.enpoems.blogspot.com. She is a passionate short film maker who has worked on two short films thus far. Gayathiri has a keen interest in Tamil feature length and short films as she strongly believes that they influence society to a large extent.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s