பேருந்து நிற்கும் இடத்திற்கு நான் நடந்து வருகையில் ஏராளமான சத்தங்கள். மலேசியாவுக்கு போக வேண்டிய பேருந்தில் ஏற வேண்டும் நான். மெதுவாய் நடந்து சென்றேன் என் பெட்டியை எடுத்து கொண்டு. துணைக்கு ஒரு வெள்ளை குச்சி.

“எக்ஸ்கீயூஸ் மீ, இந்த பேருந்து மலேசியா போகும் பேருந்தா ? எனக்கு கண்ணு தெரியாது. கொஞ்சம் உதவி பண்றீங்களா?” என்றேன் நான் என் பயணச்சீட்டை நீட்டி. எனக்கு மற்றவர்களிடம் உதவி கேட்க பிடிக்காது. எனக்கு கண்ணு தெரியாது என்பதால் மற்றவர்கள் என் மீது பரிதாபம் காட்டுவது பிடிக்காது. பரிதாபம் தானே, கருணை காட்டினால் என்ன தவறு? என்று நீங்கள் நினைக்கலாம். மன்னிக்கவும், எனக்கு அதுவும் பிடிக்காது! நான் அப்படி தான்.

ஆனால், தவிர்க்க முடியாத சூழலில் இப்படி உதவி கேட்பதை தவிர வேறு வழியில்லை! என் பயண சீட்டை பெற்று கொண்ட நபர், “ராமு. வயது 26. மலேசியா பேருந்து. நேரம் எட்டு மணி ” என்று பயண சீட்டு தகவலைச் சத்தமாகப் படித்தார். எனக்கு அது பிடிக்கவில்லை.

என்னிடம் ” நீங்க சரியான இடத்துக்கே வந்துட்டீங்க. “ என்றான் என் கையைப் பிடித்து உள்ளே சென்றவன்.

பேருந்து இருக்கை வரைக்கும் அழைத்து வந்தவன் “வேற எதாச்சு வேணுமா?” என்று கேட்டான். “நான் உன்கிட்ட வேற எதாச்சு கேட்டானே?” என சொல்லலாமா என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தை ஒலியுடன் வெளியே வரவில்லை. ‘வேண்டாம்’ என்பதுபோல் ஒரு சின்ன சிரிப்பு. அவன் கிளம்பிவிட்டான்.

பொதுவாக வியாழக்கிழமை இரவு அவ்வளவு கூட்டமாக இருக்காது. அதுவும் இது விடுமுறை நாட்கள் இல்லை. ஆக, அதிக கூட்டம் வராது. எனக்கு கூட்டம் பிடிக்காது. நான் கண் தெரியாதவன் என்பதால், எனக்கு எப்படி கண் போச்சு? நான் இப்போ எங்கே போகிறேன்?என்ன வேலை செய்கிறேன்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கும் கூட்டமும் கூச்சலும் எனக்கு பிடிக்காது.

பிறவியிலே கண் தெரியாதவன்.மலேசியாவிலுள்ள என் அக்கா வீட்டிற்கு செல்கிறேன். சிங்கையில் அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கிறேன் போன்ற தகவல்களை இந்த பேருந்தில் ஏறிய ஏராளமான பயணிகளிடம் சொல்லியிருப்பேன். இது போன்ற பேச்சுகள் வேண்டாம் என்று நான் ஒரு முடிவு எடுத்தேன்.

நான் கண் தெரியாதவன் என்பதைக் காட்டி கொள்வதில்லை. பேருந்தில் ஏறி உட்கார்ந்தவுடனே கண்களுக்கு கவசம் எடுத்து மாட்டி கொள்வேன். நான் தூங்குவதுபோல இருக்கும். நிம்மதியான பயணமாகவும் இருக்கும்!

பேருந்து கிளம்பும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்கும்போது எல்லாம், எனக்கு ‘ஊர்வசி ஊர்வசி’ பாடல் ஞாபகத்துக்கு வரும்! யாரோ பிரபுதேவாவாம், பார்த்ததில்லை. ஆனால், மற்றவர்கள் சொல்லி கேட்டுள்ளேன். இந்த பாடலுக்கு அருமையாக ஆடி இருப்பாராம்! இப்பாடலை மனதில் ஓடவிட்டேன்.

இரண்டு நிமிடம் கழித்து ஒரு சத்தம். யாரோ வருவது போல் இருந்தது. ஒருத்தர் என் காலை மிதித்தார். ‘டக்கென்று’ காலை மடக்கிக் கொண்டேன். “ஓ சாரி…” என்றது ஒரு பெண்ணின் குரல்.

அவளின் வாசனைத் திரவியம் அவ்விடத்தைக் கமகமக்கச் செய்தது. திரவியத்தின் திரியணுகம், திரியணுகத்தின் திசை, அதன் வேகம்- இப்படி சின்ன வயதில் படித்த அறிவியல் பாடம் நினைவில் ஓடியது. பக்கத்தில் தான் உட்கார்ந்தாள் . வாசனைத் திரவியம் அங்கேயே சுற்றி கொண்டு இருந்ததால் இந்த யூகம்!

“ரொம்ப சூடா இருக்கு.”  என்றாள் பெட்டிகளை கீழே வைத்தவாறு. சத்தம் கேட்டது. என் பக்கத்து இருக்கையில் தான் அமர்ந்திருக்கிறாள் என்பதை அறிந்தேன். “ம்ம்ம்….” என்றேன். அதற்குள் மேல் நான் எதுவும் பேசவில்லை. தூங்க முற்பட்டேன். தூங்க முடியவில்லை. அவளின் வாசனைத் திரவியம் என் மனசு வரைக்கும் பரவியது. கொஞ்சம் நேரம் கழித்து அவள் “சார்…. தூங்கிட்டீங்களா?” என்றாள்.

நான் குருடன் என்பதைக் கண்டுபிடித்து கேள்விகணைகளைத் தொடுப்பதற்குள் “கண்ணுல கவர் போட்டு இருக்கேன். தூங்க போறேனு தெரியல” என்றேன் எரிச்சலுடன். அவள் தொடர்ந்தாள், “அப்பரம் ஏன் இவ்வளவு நேரம் அமைதியா இருந்தீங்க?”

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. என் நிலைமையையும் என் வாழ்க்கை கதையைச் சொல்லி பரிதாபத்தைத் தேடி கொள்ள விரும்பவில்லை. சிறு வயது முதலே யாரிடமும் அதிகமாய் பேசியதில்லை.

“என்ன சார், உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டா, இப்படி சர்சர்ன்னு பதில் சொல்றீங்க சரவெடி மாதிரி” என்றாள் கிண்டலாய். அவள் நக்கல் பேச்சு எனக்கு வெறுப்பாய் இருந்தது.
“ஒன்னுமில்ல….நான் கொஞ்சம் ரிசர்வ் டைப்” என்று சமாளித்தேன்.

அவள் சிரித்து கொண்டே, “போகுற பேருந்தில் தான் ரிசர்வ் பண்ணி வைப்பாங்க….வாழுற மனசையுமா  ரிசர்வ் பண்ணி வைப்பாங்க?”

அவள் பேச்சு எனக்குள் சின்னதாய் ஒரு புன்னகை பூவை பூக்க வைத்தது. திடீரென்று ஒரு குட்டி மாற்றம். இருப்பினும் அமைதியாய் இருந்தேன். சிரிக்கவில்லை.  அவள் என்னிடன் என் குறையைப் பற்றி கேட்க கூடாது என்று வேண்டி கொண்டிருந்தேன்.

அவள் சிரித்தது எனக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தந்தன. நான் கடைசியாய் வாய்விட்டு சிரித்தது எப்போது தெரியுமா? ம்ம்….அது வந்து…ம்ம்ம்….சரிவிடுங்க….எனக்கு ஞாபகமில்லை.. வாழ்க்கையில் நான் சிரித்த தருணங்கள் கொஞ்சம் தான்.

” என் பெயர் பார்வதி.” என்றாள். அவள் கைநீட்டி ஹலோ சொல்கிறாளோ? நானும் பதிலுக்கு எங்கயோ கையை நீட்டி கண்தெரியாதவன் என்பதை நானே காட்டிவிடுவேனோ?  ஏகப்பட்ட கேள்விகளைச் சமாளித்து, அவள் சொன்னதும் உடனே நான் இரு கைகளையும் வணங்கி,

“வணக்கம். நான் ராமு.” என்றேன்.

என்னை காப்பாற்றிய, வணக்கம் சொல்லும் தமிழ் கலாச்சாரம் வாழ்க!

தலையைச் சாய்த்தபடியே இருந்தேன் தூங்கும் தோரணையில்.

“ராமு….நீங்க எங்க வேலை செய்யுறீங்க?” என்றாள்.

அவள் ‘சார்’ என்பதிலிருந்து ‘ராமு’ என்று உரிமையோடு அழைத்தது எனக்கு ஆச்சிரியமாய் இருந்தது. பிடித்திருந்தது.

“அலுவலக வேலை தான்…” என்றேன் அவளிடம்.

“அலுவலகத்துகே முதலாளியோ?” என்றாள் மறுபடியும் சிரித்து கொண்டே.

“நீங்க அடிக்கடி ஏன் சிரிக்குறீங்க?” என்றேன் நான். பைத்தியம் போல் சிரிக்கிறாள் என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன். “நீங்க நினைக்குற மாதிரி இல்ல…” என்றாள் அவள்.

“நான் உங்கள பைத்தியம் மாதிரி சிரிக்குறேன்னு நினைச்சுது உங்களுக்கு எப்படி தெரியும்” என்றேன் நான்.
“ஹாஹாஹாஹா… அதான் இப்ப சொல்லிட்டீங்களே.” என்றாள் பேச்சு சாமர்த்தியத்தோடு!
என் வாயை கொடுத்து நானே கெடுத்து கொண்டேன் என்று எனக்கு அவமானமாய் இருந்தது. சிறிது நேரம் பேசவில்லை.

“என்ன மறுபடியும் மௌன விரதமா?” அவள் ஆரம்பித்தாள்.

“ஏன் எப்ப பாத்தாலும் இப்படி சட்டுன்னு அமைதியா போயிடுறீங்க. சிரிக்க கத்துக்கனும். அப்ப தான் வாழ்க்கைல கவலை நம்மள ரொம்ப சீண்டாது. நம்ம சிரிக்கும்போது நம்ம உடம்பில் ஹிசுட்டமின் எதிர்ப்பிகள் வெளியாகும். அப்படியே டி-அணுக்கள் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பொருள் உருவாகும். அதனால நம்ம உடலுக்கும், முக்கியமா இரத்தத்திற்கும் ரொம்ப நல்லது.” என்று முடித்தாள்.

யப்பாடா இவ்வளவு விஷயம் அறிந்தவளா! ஆச்சிரியமாக இருந்தது.

நான் அவளிடம் , “எப்படி நீங்க இவ்வளவு சகஜமா பேசுறீங்க, இவ்வளவு விஷயங்கள சொல்றீங்க?”
“அப்படின்னு இல்ல. நானும் பயந்துகிட்டே தான் வந்தேன். பக்கத்து இருக்கையில் ஒரு ஆண் என்றதும், பரவாயில்ல பேச்சு துணைக்கு ஆள் இருக்காங்கன்னு சந்தோஷப்பட்டேன். ஆண்கள்கிட்ட கொஞ்ச சகஜமா பேசலாம்.” என்றாள். எனக்கு மேலும் ஆச்சிரியம்.
“ஆண்களா? பொதுவா பெண்கள், பெண்கள் இருந்தா தானே பரவாயில்லன்னு நினைப்பாங்க…” என்று வினாவினேன் நான்.

“அப்படி இல்ல…சில பெண்கள் தேவையில்லாத கேள்விகள கேட்பாங்க. புரளி
பேசுவாங்க.  தாங்கவே முடியாது, ராமு. எனக்கு பிடிக்காது. சில ஆண்கள் பக்கா ஜெண்டில்மேன் மாதிரி நடந்துப்பாங்க உங்கள மாதிரி. நீங்க என்கிட்ட ஏதாச்சு கேட்டீங்களா பாருங்க?” அதே சிரிப்புடன் சொன்னாள் அவள்.

அவள் ஜெண்டில்மேன் என்று சொன்னதும் எனக்குள் ஒரு புத்துணர்வு பிறந்தது. இப்படி மனதளவில் ஒரு சந்தோஷம் ஏற்பட்டதில்லை இந்நாள் வரைக்கும்.

என் அம்மா இறந்துபோன போது அவரை கடைசியாக பார்க்கமுடியவில்லையே என்று துடித்தேன். எனக்கு கண்கள் இல்லையே என்று தவித்தேன். அதே தவிப்பு இப்போது. பார்வதியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது.

“நம்ம இருக்கும்வரை மத்தவங்களுக்கு உதவியா இருக்கனும். முடிஞ்ச அளவு மத்தவங்க வாழ்க்கையில ஏதாச்சு ஒரு மாற்றத்தை கொண்டு வரனும்.” என்றாள் அவள். ஒரு நிமிடம் சிரித்து பேசுவார்கள், மறுநிமிடமே விளையாட்டுத்தனம் இல்லாமல் பொறுப்பாக பேசுவார்கள்- பெண்களுக்கு மட்டுமே இருக்கும் கைவந்த கலை.

நான், “அப்போ… நீங்க தொண்டூழியரா?”

“அட சரியா கண்டுபிடிச்சுட்டீங்களே!” அவள் குரலில் தெரிந்தது ஒரு ஆனந்தம்.

“ஆம். ஹிம்ஸனா என்ற அமைப்பு ஒன்னு இருக்குது இந்தியாவில். சிறுவயது பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி கொடுமைக்கு ஆளாகும் அவர்களை காப்பாற்றி அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை தருவதே இந்த அமைப்பின் நோக்கம். ஆனா ஒரு சோகம் என்னென்னா அங்க இருக்குற பெண்கள் அனைவருக்குமே எய்ட்ஸ் நோய் இருக்கு. அவர்களுக்கு மருந்து செலவு, படிப்பு செலவு. இப்படி ஏகப்பட விஷயங்களுக்கு பணம் தேவை. அதுக்காக பல பெரும்புள்ளிகளை பார்த்து நிதி திரட்டனும். அதுக்கு தான் நான் உதவி செஞ்சுகிட்டு இருக்கேன். சிங்கையிலும் மலேசியாவிலும் ஒரு மாநாடு நடக்குது. அதுக்கு தான் இங்க வந்துருக்கேன்” என்றாள் சோகம் கலந்த அக்கறை நிறைந்த குரலில்.

என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. எத்தனையோ பயணிகளை சந்தித்து இருக்கிறேன். ஆனால், இவளை போல் யாரும் இல்லை.

“உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு.” என்றேன் நான் அவள் செய்யும் பணியை கேட்டு.

“இதலாம் சாதாரணம். இன்னும் நிறைய செய்யனும்.செய்யலாம்.” தன்னடக்கத்துடன் அவள்.

நான் இதுவரைக்கும் எதாச்சு நல்லது செய்திருக்கேனா என்று நினைத்து பார்த்தேன். என்னை பற்றி தேவையில்லாமல் கவலைப்பட்டே எனது நாட்களை கடந்துவிட்டேன். நான்  கண்தெரியாதவன் என்பதைச் சொல்லி விடலாமா என்று மனம் துடித்தது. ஆனால், ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது.

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, பேருந்து ஓட்டுனர் ஓர் இடத்தில் நிறுத்தினார். உணவு வாங்க விருப்பம் கொண்டவர்கள் கீழே இறங்கினர். பார்வதி, “ராமு, நான் கழிவறை போயிட்டு வறேன்.” என்று சொன்னாள்.

“ம்ம்ம்….” என்றேன்.

என் பின்னால் உட்கார்ந்து இருந்தவர்கள், “பாவம்  இந்த பொண்ணு.இவ்வளவு அழகா இருந்தும், ஆண்டவன் இவளுக்கு கண் இல்லாம படைச்சுட்டானே.” என்று பேசி கொள்வதைக் கேட்ட மறுநொடியே என் உடம்பு முழுவதும் மின்னல் தாக்கிய ஓர் உணர்வு!

என் கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட, வாய்விட்டு அழுதேன் நான்!

*முற்றும்*

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s