தமிழ் இயல், இசை, நாடகம் என மூன்றையும் தழுவி அமைக்கப்பட்ட மேடை நாடகமே விடியல் 3. நான்கு தொழில்நுட்ப கல்லூரிகளின் இந்திய கலாச்சார குழுக்களைச் சார்ந்த மாணவர்கள் ஒருங்கிணைந்து பல மாதங்களாக வியர்வை சிந்தி, இரவு பகல் பாராமல் உழைத்து மேடையேற்றிய இந்நாடகம் வெற்றிகரமாக மக்களைச் சென்றடைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

மேனன் குடும்பத்தாரை மையமாகக் கொண்டு, குடும்பப் பிணைப்பின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர முயற்சித்தது விடியல் நாடகம். ஆடல், பாடல், நடிப்பு என்று அனைத்தையும் தந்து, பார்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது இந்த நாடகம். சிங்கைச் சூழலில், குறிப்பாக இந்திய குடும்பங்களில் நிலவும் பிரச்சனைகளைப் பிரதிபலித்துக் காட்ட முயற்ச்சித்திருப்பது பாராடிற்குரிய விஷயமே. இளையர்கள் எதிர்நோக்கும் சவால்களைத் தெளிவாக ஆராய்ந்து மிகவும் உணச்சிபூர்வமான பாணியில் படைத்திருந்தனர் மாணவர்கள்.

rsz_img_0117_copy

ராணுவத்தில் பனி புரியும் தந்தை, இல்லத்தரசியான தாய், விருப்பத்திற்கு மாறாக நிச்சயிக்கப்பட்ட திருமண வாழ்வில் சிக்கித் தவிக்கும் அக்கா, காதலில் வசப்பட்டு தந்தையின் வார்த்தைகளால் காதலை இழந்த அண்ணன், வெளியே மட்டும் சிரித்துக்கொண்டு உள்ளே அழுது கொண்டிருக்கும் தங்கை – இவர்களைச் சுற்றியே அமைந்தது நாடகம். என்றாலும் மகிழ்ச்சி, சோகம், காதல் வெறுப்பு, கோபம், நகைச்சுவை என்று பார்ப்போரை ஒர் உணர்ச்சிக் கடலில் திளைக்க வைத்தது. காதலின்றி கணவன் மனைவியாக வாழும் தம்பதியினரையும், காதல் இல்லாத காரணத்தால் விவாகரத்து வாங்கும் தம்பதினரையும் காட்டி சிங்கைச் சூழலை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறது விடியல் நாடகம்.

ஆண் ஆதிக்க சமுதாயத்தையும், காதல் செய்யும் மாயங்களை – மகிழ்ச்சி, குழப்பம், மயக்கம், மது – ஆகியவற்றையும் அழகாக சித்தரித்திருக்கிறது இந்நாடகம். மேலும், மனச்சோர்வுக்கு அடிமையாகி, தனித்து போராடி இறுதியில் தற்கொலை செய்யும் ஓர் இளம் பெண்ணின் அவல நிலையை கண் முன் நிறுத்தி, பார்போரின் நெஞ்சை சின்னாபின்னமாக்கியது, சிந்திக்கவும் வைத்தது. சராசரி வாழ்க்கையை நுணுக்கமாக ஆராய்ந்து, நாடக வடிவில் நமக்கு கொண்டு சேர்த்தது விடியலின் மாபெரும் வெற்றி!

rsz_img_0135_copy

வசனங்கள் சுலபமாகப் புரிந்துக்கொள்ளக் கூடியவையாகவும் மனத்தை உருக்கக் கூடியவையாகவும் இருந்தன. முக்கியமாக, சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்திருந்ததை நிச்சயம் மெச்ச வேண்டும். குறிப்பாக, நிச்சயதார்த்தம் முடிந்து வீட்டில் குடும்பத்தினரிடம் ராகேஷ் மேனன் மனம் விட்டு பேசும் காட்சி பார்போரின் கண்களில் கண்ணீரை மல்கச் செய்தது. மற்றும், ரஞ்சினி மேனனாக நடித்த சஹானா, வசனங்களுக்கு உயிரூட்டி மக்களை நாடகத்தினுள் ஈர்த்தது நாடகத்தின் ஒரு வெற்றி அம்சம். “வெறும் மஞ்ச கயிறு தான்”, “அனுசரிச்சு போனா தான் என்ன?”, “ஒரு வயசாச்சினா கல்யாணம் பண்ணிதான் ஆவணும்”, “(கணவன்) இல்லாமே வீட்டுக்கு வராதே!”, “I had enough!”, போன்ற வசனங்கள் நம்மை நம் வீட்டுச் சூழல்க்கே கொண்டு போய் சேர்த்தன.

கதை, வசனங்கள், நடிப்பு இவற்றைத் தாண்டி  ஆடல், பாடல் என்று பல அம்சங்கள் இருந்தாலும், சில நேரத்தில் இவையெல்லாம் தேவைதானா என்று யோசிக்கவும் வைத்தது.

rsz_img_9979_copy

நடனங்களுக்குப் பஞ்சமேயில்லை! கதைக்கு எந்தவித சம்மந்தம் இல்லாத நடனம் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தது, முடிவிலும் ஒன்று இருந்தது. நாடகம் முழுவதும் நடனம் இருந்ததில் மொத்தம் எத்தனை நடனகள் இருந்தன என்பதை எண்ண மறந்தேன். சில நடனங்கள் நேரத்தை வீணாக்கும் படியாக, தேவை இல்லாமல் திணித்து வைக்கபட்டதுபோல் இருந்தன. ஆயினும், நடன அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது என்றேதான் சொல்ல வேண்டும். நடன ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் நடனங்களுக்கு மேலும் அழகு சேர்த்தன.

குறிப்பாக “தீவாணி” என்ற பாடலுக்கான நடனம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. அப்பாடலுக்கு நடனமணிகள் அணிந்திருந்த ஆடைக்குப் பாரட்டுக்கள் கண்டிப்பாக தரவேண்டும். எல்லா  நடன அமைப்புகளும் (choreography) நன்றாக இருந்தாலும், பல நடனமணிகள் நடனத்தைச் சிறப்பாக வெளிக்கொணர சிரமப்பட்டனர்; நடனத்தை சுலபமாக அமைத்திருக்கலமோ என்று நினைக்க வைத்தது.

rsz_img_0087_copy

நிகழ்ச்சியயின் தொடக்கத்தில் பாடிய பாடல்கள் எதற்கு என்று இன்னும் புலப்படவில்லை. ஆனாலும் பாடகர்கள் திறனை வெளிக்கொனர்வதற்கான நல்ல தளமாக அமைந்தது என்றே கூறவேண்டும். பாடகர்கள் இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கையுடன் பாடியிருக்கலாம். என்றாலும் தேர்ந்தடுக்கப்பட்ட பாடல்கள், மாலை நிலவில், தென்றலோடுக் கைகோர்த்து நடந்து செல்லும் வகையில் காதுக்கு இன்னிசையாக அமைந்தன.

சில காட்சிகளும், காட்சிகளில் பயன்படுத்தப்பட்டப் பொருட்களும் தேவைதானா என்ற எண்ணமும் எழுந்தது. எடுத்துகாட்டாக, படுக்கை அறையைச் சித்தரிப்பதற்கு ஒரு சிகை அலங்கார கண்ணாடி பேழையை மேடையேற்றுவது தேவைதானா, அதுவும் இருமுறை?  சின்னஞ்சிறு விஷயங்களதான் என்றாலும் இவற்றிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்: வெறுங்காலுடன் பூங்காவிற்கு தோழனைப் பார்க்கச் செல்லும் ரஞ்சினி, திருமணச் சேலையைக் கட்டிக்கொண்டு தம்பியின் நிச்சயத்திற்குச் செல்லும் ரோஷினி (மேடையில் கணவனுடன் பேசும் போது), ஆனால் ஒளிபரப்பப்பட்ட திரைக்காட்சியில் ரோஷினி வேறொரு ஆடையில் அமர்ந்திருகிறாள்.

rsz_img_0361_copy

“நீ தேடி சென்றாலும் உன்னிடமிருந்து விலகி செல்வது மற்றவர்கள்,
நீ விலகி சென்றாலும் உன்னை தேடி வருவது உன் ரத்தம்.”

என்ற கருத்தை மிக துள்ளியமாக எடுத்துரைத்திருந்தது இந்நாடகம். மொத்தத்தில், குடும்பப் பிணைப்பின் முக்கியத்துவத்தையும், சமூக அளவில் நாம் இன்னும் சில விஷயங்களைக் கூர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது விடியல் 3.  மாணவர்கள் சிந்தனை துளிகளைத் தூவினர்; விடியும் வரை சிந்திக்கவும் தூண்டினர்.

விடியலின் விடியல் இன்னும் தூரமில்லை.
விடியலின் முயற்சிகள் விடியாமல் தொடரட்டும்.
விடியல் விண்ணைத் தொட வாழ்த்துகிறேன்.
விடியல் 4-க்கு விழி திறந்து காத்திருப்பேன்.

படங்கள்: Thulz Photography.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s