சிவா தனது தாயுடன் வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தான். அவனது தாய் கோபத்துடன் இருப்பினும் அவரது கண்களில் வருத்தமும் கலந்திருந்தது. அவரது கைபேசி அலறியது. கைபேசியில் ‘ரேகா ஆண்ட்டி’ என்று பளிச்சென்று தெரிந்தது. வாகனத்தைக் கவனமாய் ஓட்டியவாறு கைபேசியை எட்டிப் பார்த்தார். கைபேசியை முழுதாய் அணைத்துவிட்டு எரிச்சலுடன் தூக்கிபோட்டார் பின்னாடி.

சிவா பயத்துடனே வீட்டிற்குள் நுழைந்தான். அவன் அப்பா சோபாவில் உட்கார்ந்திருந்த தோரணையைப் பார்த்தவுடனே அவனுக்கு பயம் மேலும் கவ்விகொண்டது. அவன் அப்பா கைபேசியில் ஒருவருடன், “ஆமாங்க…இன்னும் வரல. தெரியல என்ன வாங்கியிருக்கானு. என் மூத்த பையன், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி PSLE எழுதும்போது அவன் தான் பள்ளியிலே டாப். ஆமா ஆமா….” என்று சிவாவின் அண்ணன் பெருமையைச் சொல்லி கொண்டிருந்தார்.

சிவா கையிலிருந்த தேர்வு முடிவு சீட்டைப் பார்த்தான். அவனது கைகள் நடுங்கின. சோபா ஓரத்தில் போய் நின்றான் அவன் அப்பா கைபேசியில் பேசி முடிக்கும்வரை. அவன் அம்மாவும் சோபாவில் அமர்ந்தார். அப்பா பேசி முடித்தார். சோபா மேசையில் தேர்வு முடிவு சீட்டை வைத்துவிட்டு, கொஞ்சம் தூரம் தள்ளி நின்றான் சிவா.

அவன் அப்பா, “மதியானத்துலேந்து ஒரே ஃபோன்!! ஒன்னும் சொல்ல முடியல. பொய் சொல்ல வேண்டியிருக்கு.” என்று குரலை உயர்த்தினார். அவருக்கு சிவாவின் முடிவுகள் தெரிந்திருந்த போதிலும் மற்றவர்களிடம் பெருமையாகச் சொல்லி கொள்ள முடியவில்லை. மேசையிலிருந்த தேர்வு முடிவு சீட்டை எடுத்துப் பார்த்தார். தூரத்தில் நின்று கொண்டிருந்த சிவாவைப் பார்த்து, “ரொம்ப பெருமையா இருக்கு.” என்று ஆத்திரத்தில் தேர்வு முடிவு சீட்டை தூக்கி சோபா மேசையில் வீசினார்.

தொடர்ந்தார், “என்ன முடிவு பண்ணியிருக்க?” என்று கேட்டார். ஒன்றுமே சொல்லாமல் அமைதியாய் நின்றான் சிவா. அவனது அப்பா பேச பேச, பயம் சுனாமி அலைகள் போல் அவன்மீது பாய்ந்தது. சிவாவிற்கு விரல்கள் நடுங்கின.

“உன்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்.” அதட்டினார் அவன் அப்பா.

சோபாவில் உட்கார்ந்து இருந்த சிவாவின் அம்மா, “உன் அண்ணனும் அதே பள்ளில தானே படிச்சான். அவன் போன டியூஷனுக்கு தானே நீயும் போனே. உன் அண்ணகிட்டயாவது கேட்டு படிச்சுருக்கலாமே?”

சிவாவின் அப்பா, “அதலாம் படிக்குற புள்ள பண்ணுவான்! இவர் தான் பெரிய துரை ஆச்சே! எல்லாமே கிடைக்குதுனு திமிரு.” என்றார் பற்களைக் கடித்துகொண்டு. அதனைப் பார்த்த சிவாவுக்கு தொண்டைக்கும் வயிற்றுக்கும் பல லட்ச உருண்டைகள் உருண்டன.

“இப்ப திட்டி என்ன பயன்? வருஷம் ஆரம்பத்துலேந்து அவன்கிட்டு சொல்லியிருக்கனும்” என்றார் சிவாவின் அம்மா.

அப்பா, “எல்லாம் நீ கொடுத்த செல்லம்.” என ஆள்காட்டி விரலை நீட்டி அம்மாவிடம் சொன்னார். சிவா எதுவும் பேசாமல் தரையைப் பார்த்து கொண்டிருந்தான். சிவாவின் அண்ணன் கொஞ்சம் நேரம் சோபா அருகில் இருந்தான். பிறகு, அவன் அறைக்குள் சென்றுவிட்டான்.

சிவாவின் அண்ணன் எப்போதுமே சிவாவிற்கு ஆதரவாக இருந்ததில்லை. இருப்பினும் அவன் அண்ணன் வெளியே நின்றபோது கொஞ்சம் தைரியமாக இருந்தது சிவாவிற்கு. அண்ணன் அறைக்குள் சென்றபிறகு, ‘பகீர்’ என்ற உணர்வு சிவாவின் மனதில் ஏற்பட்டது.

காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்ததால், மயக்கம் ஏற்பட்டது சிவாவிற்கு. பசி கலந்த பயம் ஒரு மாதிரியான மயக்கத்தைத் தந்தது. ஆனால், எந்த ஒரு உணர்ச்சியையும் வெளியே காட்டாமல் நின்று கொண்டிருந்தான்.

“அப்பரம் என்ன தான் உன் டீச்சர் சொன்னாங்க?” என கேட்டார் அவன் அப்பா. தவிழ்ந்து வந்த வார்த்தைகள் தொண்டையில் சிக்கின சிவாவிற்கு.

அப்பா, “ஹோய் உன்கிட்ட தான்….” என்றவுடன், சிவா தயக்கத்துடன்,

“நான் கணக்குல ‘சி’ வாங்கி தேர்ச்சி பெற்றத பார்த்து சந்தோஷம் பட்டாங்க.”

அதற்கு சிவாவின் அப்பா, “சி?? இத வச்சு நாக்குகூட வழிக்க முடியாது? இப்பலாம் தட்டு கழுவுற வேலைக்குகூட படிப்ப பாத்து தான் வேலையே கொடுக்குறான். கணக்குள்ள ‘சி’ வாங்கிட்டாங்களாம்…..’சி’.” என்று கொந்தளித்தார்.

சிவா சோம்பேறி அல்ல. ஆனால், படிப்பு என்பது அவனுக்கு பிடிக்காத ஒரு விஷயம். பிடிக்காமல் போன ஒரு விஷயம். படிப்பிற்கும் தேர்வு முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பவர்கள் மத்தியில் உண்மையான கல்விக்கு அர்த்தம் கிடைக்காமல் தள்ளாடியது கல்வி. பசி மயக்கமும் சிவாவைத் தள்ளாட வைத்தது.

கண்ணாடியை சரிசெய்து கொண்டே அவன் அப்பா “ஒருத்தன்கூட டியூஷனுக்கு போனியே…… அவன் பெயரு என்ன….?” என கேட்டார். அவருக்கு சிவாவின் நண்பர்களின் பெயர்களை தெரிந்து வைத்துக் கொள்ள ஆர்வமில்லை.

“ ரோஷன்.”

“ரோஷன் எப்படி செய்தான்?”

“அவனுக்கு 251 கிடைச்சுருக்கு.” என்றான் மெதுவாய்.

அப்பா, “அவன் புள்ள! அவங்க அப்பா ஒன்னும் அவ்வளவு படிச்சவர் இல்ல தெரியுமா? வசதியான குடும்பமும் இல்ல. உன்னையெல்லாம்….” என்று எழுந்தவர் நேராக சிவா நின்ற இடத்திற்குச் சென்றார். தரையையே பார்த்துகொண்டிருந்த சிவா, அப்பா வருவதைக் கவனிக்கவில்லை. எழுந்து வந்தவர், ‘பளார்’ என சிவாவின் கன்னத்தில் அரை கொடுத்தார்.

உலகம் இருண்டது. கண்கள் சுருங்கின. மண்டையில் ஆணி அடித்ததுபோல் இருந்தது. ஒரு வினாடி என்ன நடந்தது என்று புரியாமல் கீழே விழுந்தான் சிவா. தலை நிமிர்ந்து பார்த்தபோது, அவன் அப்பா மறுபடியும் அடிக்க கை ஓங்கினார். சிவாவின் அம்மா விரைந்து ஓடி வந்து அவரைத் தடுத்தார்.. “உன்னையெல்லாம் சின்ன புள்ளையிலேந்தே அடிக்காம விட்டது என் தப்பு.” என்று கத்தினார். இந்த சத்தத்திலும் சிவாவின் அண்ணன் வெளியே வரவில்லை.

மூன்றாம் வகுப்பு இறுதி ஆண்டு தேர்வுக்கு முதல் நாள் அன்று, கணக்கு கேள்வி ஒன்றுக்கு சரியான விடை எழுதாததால் பக்கத்துவீட்டு பையனோட ஓப்பிட்டு அவர் அப்பா சொன்ன வார்த்தையும் அடியும் ஞாபகத்திற்கு வந்தது. இன்னொரு நாள் வெளியே சென்றபோது தெரியாமல் காலணி கிழிந்துவிட்டது. அதற்கு அவன் அப்பா, “நீ வாழ்க்கைல உருபட மாட்டே.. ஒரு செருப்ப கூட சரியா போட தெரியுல.” என்று கூறி தெருவிலேயே அடித்தார். அதுவும் ஞாபகத்திற்கு வந்தது. இவ்வாறு அடி வாங்கிய பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

சிவாவின் அம்மா, அவன் அப்பாவைச் சாந்தப்படுத்தினார். சற்று நேரம் அங்கே நிசப்தம் நிலவியது. ஊசி விழுந்தால் கேட்கும் என்பார்களே, அது போன்ற ஓசையற்ற நிலை. அவன் அப்பாவும் அம்மாவும் அவர்களது அறைக்குள் சென்றனர். சிவா அதே இடத்தில் நின்றான். கடிகாரத்தைப் பார்த்தான். மதியம் 4.30 என்று காட்டியது. அந்த இடத்தில் நிற்கவும் இஷ்டமில்லை. அவ்விடத்தை விட்டு விலகவும் இஷ்டமில்லை.

அறையிலிருந்து வெளியே வந்தவர்கள், சிவாவின் அண்ணன் அறைக்குள் சென்றார்கள். “நாங்க ஒரு முக்கியமான இடத்துக்கு போயிட்டு வறோம்.” என்றார்கள். சிவாவிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், தேர்வு முடிவு சீட்டை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு சென்றனர். வீட்டில் இன்பமோ துன்பமோ, எது நடந்தாலும் அந்த முக்கியமான இடத்திற்கு போவது அவர்களது பழக்கம். ஆனால், என்ன இடம் என்று சிவாவுக்கு தெரிந்ததே இல்லை.

வீட்டின் கதவு பூட்டப்படும் சத்தம் கேட்டபிறகே, பெருமூச்சு விட்டான் சிவா. அவர்கள் வெளியே சென்றபிறகு தான் அவன் சற்று நிம்மதி அடைந்தான். பசியுடன் இருந்த சிவா, சமையலறைக்குள் புகுந்தான். அங்கு ஒரு உணவும் இல்லை. குளிர்பதனப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அவன் பசியைப் போக்க ஒன்றே ஒன்று தான் இருந்தது- ‘மைலோ பேக்கெட்.’

அறைக்குச் சென்றவன் மெத்தையில் விழுந்தான். மெத்தையில் ஒருக்களித்துப் படுத்தான். அறை ஓரத்தில் காற்பந்து. அதைப் பார்த்தான்.

அவன் கண்ணிலிருந்து ஒரு துளி மட்டும் கன்னத்தில் தெரித்து உதிர்ந்து ஓடியது. சிவாவிற்கு காற்பந்து வீரனாக வரவேண்டும் என்ற பெரிய கனவு இருந்தது. அதை ஒரு நாளும் அவன் பெற்றோர்களிடம் சொன்னதில்லை. சொல்ல தைரியம் இல்லை.

இரு கைகளையும் தலைக்கு பின்னால் மடக்கி வைத்து யோசித்தான் ஒரு மணி நேரத்திற்கு மேலாக. அறை ஓரத்திலிருந்த காற்பந்தை தூக்கி கொண்டு கிளம்பினான் வீட்டை விட்டு. சிவாவின் அண்ணன் அவன் போவதைக் கண்டும் ஒன்றும் கேட்கவில்லை.

boy in sea

ஈஸ் கோஸ்ட் பார்க் கடலின் காற்று சிவாவின் முகத்தில் வீசியது. கூட்டம் இல்லாத மாலை பொழுது. கடலைப் பார்த்து நின்றான் கையில் காற்பந்துடன். அவன் முகத்தில் ஒருவித கலவரம் சூழ்ந்திருந்தது. கடல் அலைகளின் சத்தம் ஒரு வகையில் அவனுக்கு அமைதியைத் தந்தாலும் இன்னொரு புரம் சோகத்தை அதிகரித்தது. கடந்த சில நிமிடங்களை எண்ணிப் பார்த்தான்- தேர்வு முடிவுகள், பயம், மயக்கம், அப்பா, திட்டியது, வாங்கிய அரை. அனைத்தும் அவன் நெஞ்சை குத்தின. கண்களிலிருந்து கண்ணீர் அருவிபோல் கொட்ட, தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான். கடல் அலைகள் கறையைத் தட்டி சென்றன.

‘ரோஷன் வீட்டில் பணம் பிரச்சனை. அந்த மாதிரி நம்ம வீட்டில இல்ல. அப்பாவும் அம்மாவும் கஷ்டப்படுறாங்க எனக்காகவும் அண்ணனுக்காகவும். எனக்கு பிடிச்சது வாங்கி தந்து இருக்காங்க….’ என்று சிந்தனை ஓட்டம் தொடர, சிவா காற்பந்தை தடவி கொடுத்தான்.

தொடர்ந்தது அவன் சிந்தனை ஓட்டம் – ‘என்னால தான் அவங்கள பெருமைப்படுத்த முடியல. எவ்வளவு படிச்சாலும் முடியல. இனி நிறைய தேர்வு காலங்கள் வரும். அதிலும் இப்படி தான் கஷ்டப்படுத்த போறேன் எல்லாரையும். என்னால முடியல. பயமா இருக்கு.’ இதை நினைத்து அவன் மனம் பதறியது. இதயதுடிப்பு வேகமாக அடித்துக் கொண்டது. உடம்பெல்லாம் கூசிப்போய் வாழ்க்கையே வெறுத்துப்போன நிலையில் இருந்தான்.

கடல்கரையில் ஒரு உடைந்த மணல்வீடு இருந்தது. உடைந்திருந்த மணல்வீடு அவன் மனம்போல் காட்சியளித்தது. அதையே கண்கொட்டாமல் பார்த்தான். மறுநொடி, ஒரு பெரிய அலை அதனை முழுதாய் உடைத்துவிட்டு சென்றது.

வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு எடுத்தான். கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  முதலில் அவன் கால்கள் நனைந்தன. மீண்டும் நடந்தான். முட்டியைத் தொட்டது கடல் நீர்.  வீடு திரும்பிய சிவாவின் அப்பா, சிவாவின் கையடக்க தொலைபேசிக்கு அழைத்தார்.

சட்டை பையிலிருந்த கைபேசியின் அதிர்வுகளை சிவா பொருட்படுத்தவில்லை. அலை சாரல் அவனது முகத்தில் பட்டது. தொடர்ந்து கடலை நோக்கி நடந்தான்.  கையில் காற்பந்தை இறுக்க கட்டிகொண்டான்.

“ச்சே….இவன் இருக்கானே!!! என்ன பண்ணிகிட்டு இருக்கான்?” எரிச்சலுடன் மீண்டும் கைபேசிக்கு முயற்சி செய்தார் சிவாவின் அப்பா.

கழுத்துவரை கடல்நீர் இருந்த நிலையில் கண்களை மூடிகொண்டான் சிவா.

இரவு மணி 9 ஆகியும் சிவா வீட்டிற்கு வரவில்லை என்பதை அறிந்த சிவாவின் பெற்றோர்கள், அவன் அண்ணனிடம் “எங்க போய் இருக்கான் தெரியுமா உனக்கு? என்று கேட்டனர்.

சிவாவின் அண்ணன், “ தெரியல. ஆனா அவன் போகும்போது கையில் காற்பந்து வச்சு இருந்தான்” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவனது அறைக்குள் சென்றான்.

சிவாவின் அம்மா, “ஐயோ, இந்த சிவா ஏன் இப்படி பண்ணுறான்? இன்னிக்கும் காற்பந்து தானா?” என்று நெற்றியில் அடித்துக் கொண்டார்.

“அவன் வரட்டும். முதல அந்த காற்பந்த தூக்கி குப்பைல போட்டா தான் சரியா வரும்.” என்று கூறிய அவனது அப்பா மீண்டும் ஒருமுறை சிவாவின் கைபேசிக்கு அழைத்தார். சிவாவின் காற்பந்து தனியாக கடலில் மிதந்தது.

இரவு மணி 10 ஆனது.

காவலர்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது சிவாவின் வீட்டிற்கு. அதனை எடுத்த சிவா அப்பாவின் முகத்தில் ஈயாடவில்லை.  சிவாவின் அம்மா கதறி அழ ஆரம்பித்தார்.முழுதாய் நனைந்தவன், மணலில் உட்கார்ந்து கிறுக்கினான் – எனக்கு பயமா இருக்கு.’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s